சிறுபதிவு

பழந்தமிழர்களின் நீர் மேலாண்மை! 

தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!

பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை! 
அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள்.
இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு நீராணிக்கர்கள் என பெயர்!

ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!

நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா?

அவர்களுக்கு நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்!
ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!

ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!

அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!

அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!

என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.

ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!

அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே குளத்துக்காப்பாளர்கள்!

இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.

ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!

அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!

ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நீர்வெட்டியார் அல்லது நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!

இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!

பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!

இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்!

ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும்.
இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள்.
மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!
சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது!

களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை!

இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது!

ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும்.
இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!

இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் குமிழி!

இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள்!

ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் குமிழி இருக்கும்.

இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப்பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும்!

ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள்.

சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும்!

வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்!
ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின!

ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.

ஏரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம்.

இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்!

விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள்!

அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது!

ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள்!
இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள்!
இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை மடையர்கள் பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என கணக்கீடுகளை தெரிந்திருந்தார்கள்!

ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை ‘நீர் பாச்சி’ என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம்!

இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக குமுழிப்பள்ளர்கள் இருந்தார்கள்!

இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக ‘முறைப் பானை’ என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்!

இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள்.

இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள்!
அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள்…!

நீரைப்பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் குமுழிப்பள்ளர்களை அடித்துக் கொள்ள முடியாது!

நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!

அதனால் தான் மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு மடையர்கள் என்று பெயர் இருந்தது!
மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும்.

மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.

இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும்!

ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும்!

வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் தண்டோராமூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்!

அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும்.

அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். மடையன்என்று அழைக்கப்படுபவர்!

தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவ வீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இவர் செய்யும் தியாகமும்!

மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான்!

ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார்!

ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல!

ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை அன்று திணறடித்த செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம்.

இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம்!

எவ்வளவு மூச்சை தம் கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பது போல்!

மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்று விடுவதும் உண்டு!

இப்படி மடையை திறக்கப் போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக நடுகல் நட்டு வைப்பார்கள்!

50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார்!

மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு! “ஏரிகள் – குளங்கள் குடி மராமத்து” 

ஒரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன!எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம்!

அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது!

ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும்!

அப்படி ஒரு நீர் நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும், கல்வெட்டும்!

அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்!

சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்!

‘குளம் வெட்டுதல்’ என்பது முதல் அம்சம். அதில் ‘கலிங்கு அமைத்தல்’ 2வது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் ‘வரத்துக்கால்’, மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் ‘வாய்க்கால்’ அமைப்பு போன்ற அனைத்தும் 3வது அம்சம். ‘ஆயக்கட்டு’ பகுதிகளை உருவாக்குதல் 4வது அம்சம். ஊருக்கான ‘பொதுக்கிணறு’ அமைத்தல் 5வது அம்சம். 

பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும்!
ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்!

மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும்!

இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்!

சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்!

நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும்!

அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது.

அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது!

சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகிவிட்டது!

அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..?

விட்டுவிடுவார்களா..!?

வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள் மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா..?!

பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள்!

இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் மாற்றிக் கொண்டார்கள்!

இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள்!

இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள்!

இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.

கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்!

இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு குடிமராமத்து எனப் பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக்கொள்ளும் முறை.
வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குளங்களை சுத்தப்படுத்துவார்கள்!

இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன…!

இப்படி ஊர் மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?

பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்!

“கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்.”

அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.

ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!

மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!

இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்…

அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது…!

இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!

இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு பொய்கை, ஊற்று என்று பெயர்.

தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு சுனை, கயம் என்று பெயர்!

ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு குட்டை என்று பெயர்!

இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!

மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு குளம் என்று பெயர்!

அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!

பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல்.

இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது. குளங்கள் மனிதர்களின் உடலை குளிர்வித்தன!
நன்றி : தஞ்சை ஆ மாதவன் அவர்களின் ட்விட்டர் தொடர்.

பழந்தமிழரின் நீர் மேலாண்மை

Advertisements
சிறுபதிவு

மஹாகவி பாரதி ஒரு சகாப்தம். இதில் இருவேறு கருத்துகள் இல்லை முற்றிலும் உண்மை. பாரதி ஒரு மஹாகவி இதுவும் நூற்றுக்கு நூறு உண்மை தான்.

ஆனால் மஹாகவி என்றவுடன் கவிதைகள் பல புரிந்தவன் என்ற எண்ணம் மட்டுமே தொன்றுவது இயற்கை. பாரதி ஒரு கவி மட்டும் அல்ல. பற்பல கவிதைகளை எழுதியதோடு அவரது பணி நின்றுவிடவில்லை. பல கட்டுரைகள், கவிதைகள், பல கதைகள், பல கேலிச்சித்திரங்கள், பல செய்தி தொகுப்புகள் என அவரது எழுத்துகள் பயணித்து உள்ளன.

சரியாகக் கூறபோனால் அவரது எழுத்துகளில் 30% மட்டுமே கவிதைகள் மீதி 70% கதைகள், கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள், செய்தி குறிப்புகள்.

பாரதி தொடாத விஷயங்களே இல்லை எனலாம். அவரது எழுத்துக்களில் தேசம், தெய்வம், தர்மம் என்ற அனைத்துக் கூறுகளையும் காண முடியும்.

பாரதி வேதாந்தம், சித்தாந்தம், ஆன்மீகம் என பல துறைகளையும் பற்றி எழுதியுள்ளார்.

பாரதி ஒரு “சித்தன்”. ஆம்! அவனது சுயசரிதையின் இரண்டாம் பகுதியான “பாரதி அறுபத்தாறு” என்ற பாடல்களில் துவக்கத்திலேயே அவன் இவ்வாறு கூறுகிறான் “எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தார் அப்பா! யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்நாட்டில்”

மகாகவி, கட்டுரையாளன், கதைகள் புனைந்தவன், கேலிச்சித்திரக்காரன், யோகி, சித்தன், தேச பக்தன், சக்திதாசன் என பன்முகத்தன்மை படைத்த பாரதி பிறந்தது திருநெல்வேலிச் சீமையில் எட்டையபுரத்தில் சித்திரபானு ஆண்டு கார்த்திகை மாதம் 27ஆம் நாளன்று, அதாவது 11 டிசம்பர் 1882.

தந்தை ஸ்ரீ சின்னசாமி ஐயர் தாய் ஸ்ரீமதி லக்ஷ்மி அம்மாள் பிறந்தபோது இடப்பட்ட பெயர் “சுப்ரமணியன்”, செல்லப் பெயர் “சுப்பையா”.

சுப்பையா சிறு வயதிலேயே கவிபாடும் தன்மை பெற்றிருந்தான். நாடி எடுத்துக் கொடுத்தால் அதன் அடிப்படையில் கவி புனைந்து விடுவான்.

இவன் பிறந்த ஊரான எட்டையபுரம் ஒரு ஜமீன். அதன் அரசரின் அவையில் தமிழ் புலவர்கள் கூடுவது வழக்கம். இந்தப் புலவர்கள் கூடும் அவையில் சுப்பையா சிறுவனாக இருந்த போதிலும் கலந்து கொள்வான். எட்டையபுரம் சமஸ்தான அரசரின் செல்லப்பிள்ளையாகவும் கருதப்பட்டான்.

சுப்பையாவின் வயது 11 அப்போதே ஸ்ரீ குருகுஹ தாமப் பிள்ளை என்பவரால் எட்டயபுரம் அரசரின் தமிழ் புலவர்கள் கூடுதலில் பங்கு கொள்ளும் ஸ்ரீ சிவ ஞான யோகி என்பவருக்கு அறிமுகப்படுத்தப்பட்டான். சுப்பையாவின் கவிபாடும் திறனைச் சோதித்த ஸ்ரீ சிவ ஞானயோகியார் எட்டையபுர அரசவையில், அரசர் முன்னிலையில் சுப்பையாவுக்கு “பாரதி“ என்ற பட்டத்தை முன்மொழிய, அரசரும், அவைப் புலவர்களும் இதனை வழிமொழிந்தார்கள். இது நிகழ்ந்தது 1893ம் ஆண்டு, அன்று முதல் சுப்பையா ஸ்ரீ சுப்ரமணிய பாரதி என அழைக்கப்பட்டான்.

பாரதி பட்டம் பெற்ற சுப்பிரமணியன் தனது இளமைக் காலத்தைப் பற்றி தனது சுயசரிதையில் கூறும்போது ஆங்கில கல்வியால் தமக்கு எந்தப் பெரும் நன்மையும் உண்டாகவில்லை என தெரிவித்துள்ளான். தான் கற்ற ஆங்கில கல்வி, “புல்லை உண்க என வாளறிச் சேயினை பணித்தது போல இருந்தது” என்றும் “ஊன் விலை வாணிபம் நல்லது என்று ஒரு பார்ப்பனப் பிள்ளையை ஈடுபடுத்துவது போல் இருந்தது” என்றும் “செலவு தந்தைக்கு ஓராயிரம் தீது எனக்கு பல்லாயிரம் வந்தன” என்றும் கூறியுள்ளான்.

சுப்பையாவின் பள்ளிப் பருவத்தில் இவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழ்ப் புலவர் ஸ்ரீ காந்திமதி நாதப் பிள்ளை பாரதியிடம் “பாரதி ஒரு சின்னப்பயல்” என்று ஈற்றடி அமைத்து ஒரு வெண்பா பாட சொன்னார். பாரதி பாடினார் “நான் வயதில் இளையவன், தான் பெரியவன் என்ற அகந்தை கொண்டவன் என்னை இகழ்ந்து ஏளனம் செய்கிறார்” என்று உணர்ந்த பாரதி – “மாண்பற்ற காரிருள் போல் உள்ளத்தான் காந்திமதி நாதனைப் பாரதி சின்னப் பயல்” என காந்திமதி நாதனைப் பற்றி (பார்+அதி = பாரதி), அதி சின்னப் பயல் என பொருள்படும்படி பாடினார்.

பாரதி வயது 15, 1897ஆம் ஆண்டு பாரதிக்கும் ஏழு வயதான செல்லம்மாவும் திருமணம். திருமண நிகழ்ச்சிகள் முடிந்த உடன் பாரதி – கவித்திறன் படைத்த பாரதி – தனது மனைவியை பார்த்து “ஒரு காதல் பாட்டு பாடு செல்லம்மா” என்றதும் வெட்கத்தால் மனம் குன்றிவிட்டாள்.

பிரிதொரு நாளில் பாரதியின் மறைவுக்குப் பிறகு ஆல் இந்திய ரேடியோவில் “என் கணவர்” என்ற தலைப்பில் பாரதியின் மனைவி செல்லம்மாள் உரையாற்றினார். அப்போது அவர் கூறியது “எனக்கு ஒரு சாதாரண கணவர் எல்லோருக்கும் கிடைத்தது போன்ற ஒரு கணவர் கிடைக்கவில்லை, என்ற ஏக்கம் கொண்டேன்! ஆனால் அவருடன் வாழத் தொடங்கிய சில ஆண்டுகளில், யாருக்கும் கிடைக்கப்பெறாத ஒரு மஹா புருஷர் எனது கணவராக கிடைத்தது புரிந்துக்கொண்டேன் என்றார்.

திருமணத்திற்குப் பின் தன் தந்தையை 16 வயதில் இழந்த பாரதி, மேற்படிப்புக்காக காசி சென்று, அங்கு தன் அத்தையின் வீட்டில் தங்கி படித்தார். அப்போது அவருக்கு அன்னிபெசன்ட் அம்மையார், பண்டிட் எஸ் நாராயண அய்யங்கார் ஆகியவர்களுடன் ஏற்பட்டத் தொடர்பு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. பாரதியின் மனதில் பல மாற்றங்கள், தேசிய உணர்வுகள் ஏற்பட வழிவகுத்தது.

காசியிலிருந்து எட்டயபுரம் திரும்பி பாரதியை எட்டையபுரம் சமஸ்தானத்தில் சிலகாலம் பணி புரிந்தார். பின்னர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தாற்காலிக உதவித் தமிழ் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். தொடர்ந்து சுதேசமித்திரன் தினசரியின் துணை ஆசிரியராக சென்னையில் ஒரு பொறுப்பேற்றுக்கொண்டார். 1906 இல் தொடங்கப்பட்ட (வங்கப் பிரிவினைக்குப் பிறகு) சுதேசி இயக்கத்தில் பாரதி தன்னை இணைத்துக் கொண்டதும், ஆங்கிலேயர்களின் கழுகு பார்வை பாரதி மீது விழுந்தது. ஆங்கிலேயர்கள் பாரதிக்குப் பல இடர்களையும், கொடுமைகளையும் இழைக்கத் தொடங்கினர்.

பாரதியின் வாழ்வில் “பாரத விடுதலை மோகம்” கொழுந்து விட்டு எரிய காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் பட்டணம் ஸ்ரீ ஜி.சுப்ரமணிய அய்யர் இவர் ஒரு சுதேசி அபிமானி, தேசியவாதி, இவர் துவங்கியது தான் தி இந்து ஆங்கில நாளேடு. தமிழில் சுதேசமித்திரனையும் இவர்தான் துவக்கினார். இவரது நட்பில் வளர்ந்த பாரதி மிகச் சிறந்த தேசபக்தராக, சுதேசி அபிமானியாக மாறியதில் வியப்பொன்றுமில்லை.

பாரத நாட்டின் வரலாறு, பெருமை இவை அழிந்து விடக்கூடாது. “பொய்யாய், பழங்கதையாய், கனவாய்” ஆகிவிட பாரதி விடவில்லை. எனது தாய்நாட்டின் “முன்னாள் பெருமையும் இந்நாள் சிறுமையும்” போன்ற பாடல்களை எழுதி “இந்த நாடு பழம்பெரும் நாடு! பாருக்கெல்லாம் திலகம்” என்பதனை உணர்த்தினார் பாரதி.

இந்த நாட்டின் இளைஞர்கள் துடித்தெழ வேண்டும் என்ற ஆசையில், “சிவாஜி தனது சைனியத்தாருக்கு கூறியது போன்ற பாடல்களை எழுதி எழுச்சி ஊட்டினார் பாரதி. இந்தப் பாடலில் ஒவ்வொரு வரியும் எழுச்சி கொண்டவை,

பாரத பூமி பழம்பெரும் பூமி

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

பாரத நாடு பார்க்கெலாம் தெய்வம்

எனத் தாய் நாட்டுப்பற்றை ஊட்டும் பாரதி கூறுகிறான், “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்தது இந்நாடு” என இடித்துரைக்கிறார் இந்த மஹாகவி.

கொல்கத்தாவில் ஒரு காங்கிரஸ் தொண்டரின் பண்ணை வீட்டில் நடந்த விருந்து உபச்சாரத்தில் கலந்துகொண்ட பாரதிக்கு அறிமுகம் ஆனார் விவேகானந்தரின் சீடர் சகோதரி நிவேதிதை. (முன்னாளில் இவர் மார்கரெட் எலிசபெத் நோபல் என்ற பெயர் பெற்றவர்). இவர் மூலம் பெண் உரிமைகள் பற்றிய அறிந்து, பின்னர் பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் பாரதி. விவேகானந்தரின் சிஷ்ய ரத்தினங்களில் ஒருவர் என்றும், தனது குருமணி என்றும் சகோதரி நிவேதிதாவை வர்ணித்தார் பாரதி.

“கற்பு நிலை என்று சொல்லுவார்கள் இரு சமூகத்திற்கும் பொதுவில் வைப்போம்”, “ஆணுக்குப் பெண் தாழ்வே ஆமென்பார் சொல்லுக்கு நாணி உறங்கு நீ நகைத்து நீ கண்ணுறங்கு”, “கண்கள் இரண்டிலனில் ஒன்றைக் குத்திக் காட்சிக்கெடுத்திடலாமா” என்றெல்லாம் பாரதி பெண் சக்தியின் அவசியத்தைக் கூறிச் சென்றுள்ளார்.

பாரதி வேதங்கள் குறித்து, வேதாந்தங்கள் – சித்தாந்தங்கள் குறித்து, ஹிந்தி மத சாரங்கள் குறித்து, தேசிய தன்மைகள் குறித்து, சங்கமாக (கூட்டாக) செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து, எல்லாவற்றையும் அவரது கட்டுரைகளில் விளக்கமாக கூறியுள்ளார்.

உபநிடதங்கள் குறித்து எழுதியுள்ள பாரதி, பகவத் கீதையை மொழிப்பெயர்த்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஸ்ரீ பக்கிம் சந்திரர் இயற்றியுள்ள “சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம்” எனத் தொடங்கும் “வந்தே மாதர” கீதத்திற்கு இரு மொழிப்பெயர்ப்புகளை பாரதி அளித்துள்ளார்.

மேற்குலத்தவர் எவர்? நல்ல பெருந்தவம் எது? புண்ணிய மூர்த்தி என்பவன் யார்? யோகி என்பவன் யார்? எது யோகம்? எது யாகம்? எது மெய்ஞ்ஞானம்? முக்தி என்பது என்ன? என்று இப்படிப் பல வினாக்களுக்கு பாரதி தனது பாடல்களில், கட்டுரைகளில் விளக்கம் அளித்துள்ளார்.

பாரதியின் புதிய ஆத்திச்சூடியில் “தெய்வம் நீ என்று உணர்”, “போர்த் தொழில் பழகு”, “ரௌத்திரம் பழகு”, “வேதம் புதுமை செய்”. “வையத் தலைமை கொள்”, முழுமையும் படித்துணர்வது அவசியம்.

இவரது “பாஞ்சாலி சபதம்” அடிமையுற்றிருந்த பாரத தேவியின் சபதம் என்ற உணர்வை ஊட்டுகிறது. இவரது ஆழ் சிந்தனைகளுக்கு அணை ஏது? தடை ஏது?

பாரதியை – நம் பன்முக பாரதியை – புரிந்துகொள்ள ஒரு ஆயுள் போதாது என்பதை உணர்வோம். அவர் வழி பயணிப்போம்.

எழுத்துச் சித்தன் பாரதியார்!!

சிறுபதிவு

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொண்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்

யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது

யோகேந்திர சிங்

யோகேந்திர சிங்

கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ், டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை மேற்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ். அப்போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழிந்தார்கள். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ராணுவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.

இதை கவனித்த கிரேனேடியர் யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று, கிரெனைடுகளை வீசியும், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் தீரும் வரையும் போரிட்டு நாலு பாகிஸ்தானியரை கொன்றார். எதிரியின் குண்டுகள் அவர் உடலை துளைத்தும் மரணிக்கும் கடைசி வினாடி வரை அவரது துப்பாக்கி குண்டுகளை உமிழ்வதை நிறுத்தவில்லை. யோகேந்திரசிங் யாதவின் வீர மரணத்தை கண்ட இந்திய ராணுவம் உத்வேகம் அடைந்து முன்னேறி சென்று டைகர் ஹில்ஸை தாக்கி கைப்பற்றியது.

கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம்வீர் சக்ரா விருது 

மனோஜ் குமார்

மனோஜ் குமார்

ராணுவத்தில் சேர்கையில் இன்டர்வியூவில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீ ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறாய்?” என்பது

அதற்கு மனோஜ்குமார் பாண்டே அளித்த பதில் “நான் பரம்வீர் சக்ரா விருதை வெல்ல விரும்புகிறேன்”!!! பரம்வீர் சக்ரா விருது வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வழங்கபடும் விருது.

இவர் கார்கில் போரில் ஜூபார் பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் பங்குபெற்றார். மிக குறுகலான பகுதியில் படைகளை வழிநடத்தி சென்றார். இதை கண்ட எதிரிகள் குன்டுமழை பொழிந்தார்கள். குண்டுகளை மார்பில் தாங்கியபடி வீர முழக்கம் எழுப்பியபடி முன்னேறி பாய்ந்தார் மனோஜ் பாண்டே. குண்டுகள் தீர்ந்த நிலையில் எதிரியின் முதலாவது பங்கரை அடைந்து அங்கே இருந்த இரு பாகிஸ்தானியரை வெறும் கையால் அடித்து கொன்றார். அதன்பின் குன்டுகாயத்தால் தம் இன்னுயிரை இழந்தார். தம் கேபட்னின் வீரமரணத்தை கண்ட இந்திய ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து முன்னேறி தாக்கினார்கள். கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஜூபார் பகுதி இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது

 கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம்வீர் சக்ரா விருது

விக்ரம் பத்ரா

விக்ரம் பத்ரா

கேப்டன் விக்ரம் பாத்ரா 17,000 அடி உயரம் கொண்ட பாயின்ட் 5140 எனும் மலை சிகரத்தை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். தம் வீரத்துக்காக ‘ஷேர் ஷா (சிங்க ராஜா) என அழைக்கபட்ட விக்ரம், மலையின் பின்பகுதி வழியே எதிர்பாராதவிதமாக ஏறி தாக்குதல் தொடுத்தார். கடும் குண்டுமழைக்கு இடையே உடலெங்கும் குன்டுகாயங்களை தாங்கியபடி மலை உச்சியை நெருங்கிய விக்ரம் அங்கிருந்து சுட்டுகொண்டிருந்த எதிரியின் பீரங்கி மேல் இரு கிரனைடை எறிந்தார். அதில் இருந்து எதிரி மீள்வதற்குள் மலை உச்சியை அடைந்து மூன்று எதிரிகளை தனி ஒருவராக கொன்றார். அதன்பின் இந்திய படை மலை ஏறி எட்டு பாகிஸ்தானியரை கொன்று ஒரு பெரிய மெஷின்கன்னையும், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பாயின்ட் 5140வையும் கைப்பற்றியது. மலை உச்சியில் இந்திய கொடியைப் பறக்கவிட்டபின் விக்ரம் சர்மா தம் இன்னுயிரை நீத்தார்

ரைபிள்மேன் சஞ்சய் குமார், பரம்வீர் சக்ரா விருது

சஞ்சய் குமார்

சஞ்சய் குமார்

இவர் சாதாரண படைவீரர். ஆனால் அசாதாரணமான வீரத்தை களத்தில் காட்டினார். ஏரியா பிளாட் டாப் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற படையில் பங்கு பெற்றார். மலை உச்சியில் இருந்து எதிரிகள் சுட்டார்கள். குண்டுமழைக்கு நடுவே மலை ஏறும் நிலையில் 150 அடி தூரத்தில் எதிரி பங்கர் ஒன்றை பார்த்தார் சஞ்சய்குமார்

150 அடிதூர பங்கரை நோக்கி எழுந்து ஓடினார். எதிரிகுண்டுகள் அவர் மேல் பாய்ந்தவண்ணம் இருக்க மார்பில் மூன்று குண்டுகளை தாங்கியபடி ஓடினார். அடுத்த குண்டு அவரது மணிக்கட்டில் பாய்ந்து துப்பாக்கீயை வீழ்த்தியது. தளராமல் பங்கரை அடைந்து வெறும் கையால் மூன்று பாகிஸ்தானியரை அடித்து கொன்றார் சஞ்சய் குமார். அதன்பின் அவர்களின் இயந்திர துபாக்கியை எடுத்து இரண்டாவது பங்கரில் இருந்த பாகிஸ்தானியரை சுட்டுகொன்றார். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தானியர் இரண்டாவது பங்கரை விட்டு ஓடினார்கள். ஏரியா பிளாட் டாப்பை இப்படி தனி ஒருவராக தன் இன்னுயிரை பலி கொடுத்து கைப்பற்றினார் சஞ்சய்குமார்.

மேஜர் சரவணன், வீர் சக்ரா விருது

மேஜர் சரவணன்

மேஜர் சரவணன்

மேஜர் சரவணன் படாலிக் பகுதியை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். கார்கில் போர் முழுக்க மலைபகுதியின் மேல் இருந்து தாக்கும் எதிரியை கீழே இருந்து தாக்கி அழிக்கும் நிலையிலேயே இந்திய படை இருந்தது. இப்போரில் மேலே இருந்து சுட்ட எதிரி மேல் ஒரு ராக்கெட்டை செலுத்தி இரு எதிரிகளை அழித்தார் சரவணன். அவர் உடலில் ஷார்ப்பனல் குண்டு பட்டபோது அவரது கமாண்டர் “போதும். சரவணன், வந்துவிடு” என அழைத்தார். தன் உயிர் போகும் நிலையை உணர்ந்த சரவணன் “இன்று இல்லை, காப்டன்” (Not today, captain) என சொன்னபடி குண்டுகளை வீசி மேலும் மூன்று எதிரிகளை வீழ்த்தியபின் கார்கிலின் வெண்பனியில் விழுந்து வீரமரணம் அடைந்தார்.

நாட்டுக்காக எல்லாரும் சிலவற்றை கொடுத்தார்கள். ஆனால் இம்மாவீரர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் தாய்நாட்டுக்காக ஈந்தார்கள். இவர்களை நினைவை நம் மனதில் என்னாளும் போற்றுவோம்

வந்தே மாதரம்! வெல்க பாரதம்!! வாழ்க இம்மாவீரர் புகழ்!!!

நன்றி : திண்ணை.காம்

கார்கில் வெற்றி தினம் – இன்று

சிறுபதிவு

பிப்ரவரி 19 1627 – சத்ரபதி சிவாஜி பிறந்தார்.

மிக சாதாரண நிலையில் இருந்து தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இந்த உலகை வென்றவர்கள் தான் சரித்திரத்தில் பெயர் பெறுகின்றனர். அப்படிப் பட்ட உன்னத நிலையை எய்தியவர்கள் மிகவும் சிலரே, அந்த சிலரில் குறிப்பிடத் தகுந்தவர் மன்னர் சத்ரபதி சிவாஜி ஆவார்.

சத்ரபதி சிவாஜி மகராஜ்

சத்ரபதி சிவாஜி மகராஜ்

இரும்பைவிட வலிமையான மன உறுதி, கூர்மையான அறிவுத் திறன், தன்னை போன்றே சிந்திக்கவும், செயலாற்றவும் கூடிய வலிமையான படையை உருவாக்கிய சிந்தனை இவையெல்லாம் தான் சத்ரபதி சிவாஜியை மாபெரும் வெற்றி வீரனாக மாற்றியது.

 1. முதன் முதலில் கெரில்லா போர்முறையை அறிமுகப்படுத்தியவர்.
 2. 16 வது வயதிலேயே தன்னுடைய முதல் கோட்டையைப் பிடித்தவர்.
 3. தான் சந்தித்த எந்த போரிலும் தோற்காதவர்.
 4. அவுரங்கசீப்பினால் கடைசி வரை தோற்கடிக்கப்படாதவர்.
 5. மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை தன்னுடைய மிகச் சிறிய படையை வைத்து சிதறடித்தவர்.
 6. உளவுத் துறையை மிகத் திறமையாகப் பயன்படுத்திவர்.
 7. வலிமையான கப்பல் படையை உருவாக்கக் காரணமாக இருந்தவர்.
 8. ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர், இருந்தும் அனைத்து மதங்களையும் சரி சமமாக மதித்தவர்.
 9. பெண்களைப் பெரிதும் மதித்தவர்.
 10. வாழ்வில் மிக மோசமானத் தருணங்களிலும் துவண்டு போகாமல் அசாதாரணமான துணிச்சலையும், போராட்ட குணத்தையும் காட்டியவர்.

அமெரிக்க – வியட்னாம் போர் முடிந்த பின்பு பாரதம் வந்த அப்பொதைய வியட்னாம் தலைவர், முதலில் பார்க்க விரும்பியது சத்ரபதி சிவாஜியின் சமாதியை தான். அங்கு வந்த அவர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி விட்டு அதற்கான காரணத்தை அவர் சொன்னார்.

வல்லரசான அமெரிக்காவை எதிர்க்கும் துணிச்சலை அவர்கள் (வியட்நாமியர்கள்) பெற்றது சிவாஜியின் மூலம் தான். அவருடைய கெரில்லா போர்முறை, அவர் பயன்படுத்திய சாதுரியமான உத்திகள், சாகசங்கள் அவர்களுக்கு தெம்பும், உற்சாகமும் தந்து அமெரிக்காவை வீழ்த்த பேருதவி செய்தது. அதை நினைவு கூர்ந்தே அவர் பாரதம் வந்ததும் சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று சத்ரபதி சிவாஜியின் 387வது பிறந்த நாள்.

சத்ரபதி சிவாஜி

சிறுபதிவு

அப்போது ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன் என்று ஞாபகம். பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக குடி வந்தார்கள். அந்த வீட்டுத் தாத்தா மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

6632b-guavatree

அவர் வீடு கட்டி குடி வந்த போது அந்த வீட்டு வாசலில் ஒரு கொய்யா மரம் இருந்தது. ஆனால் அது எப்போதும் வாடியே தான் இருக்கும். அந்நியன் படத்தில் கலாபவன் மணி வாடகைக் கேட்டு கொடுமைப்படுத்தும் ஒல்லிக் குச்சி மாமி போல இருக்கும்.

ஆனால் அவர் வந்ததும் அந்த இடத்தை அப்படியே மாற்றிவிட்டார். சீக்கு வந்த மரம் படு ஷொக்காக மாறியது. நல்ல இயற்கை உரமிட்டு அதை தெம்பாக்கி விட்டார். பல பூச்செடிகளை நட்டு வளர்த்தார். கொய்யா பழம் காய்த்த போது அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.

நான் கொய்யா அடிக்க முயற்சி செய்யும் போதெல்லாம், எங்கிருந்து பார்ப்பார் என்று தெரியாது, “ஆருடா அவன் கொய்யா அடிக்கிறது” நான் தான் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திட்டுவதும் அவருக்குத் தெரியாமல் கொய்யா அடித்துத் திண்பதும் ஒரு ஆனந்தம் தான். ஆனால் அவர் மகனுக்கு மரம் வளர்ப்பதில் பெரிய நாட்டம் ஒன்றும் இல்லை.

மழை பெய்யும் காலத்தில் கொய்யா நன்றாக விளையும், வெயில் காலத்தை விட மழைக் காலங்களில் விளையும் கொய்யா பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பது என் அனுபவம்.

என்ன தான் திட்டினாலும் நான் கொய்யா பறித்து தின்பதில் அவருக்கு ஒரு திருப்தி தான். தான் வளர்த்த ஒரு மரத்தின் பயனை இவன் ஒருவனாவது பெறுகிறானே என்ற சந்தோஷம். ஒரு பதிவை எழுதிவிட்டு அதை யாராவது படித்தார்கள் என்பதை பார்க்கும் போது ஒரு திருப்தி வரும் பாருங்கள் அது போன்றது. அவர் அந்த கொய்யா மரத்தை மிகவும் நேசித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் விடியர்காலை நேரம் பக்கத்து வீட்டு அழுகையும், ஓலமும் எங்களை எழுப்பி, தாத்தா இறந்த செய்தியையும் சொன்னது. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரை ஏமாற்றி விட்டு கொய்யா பறிக்கும் ஒரு குறும்பும், பெரிதாக ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும் என்னிடம் இருக்கும்.

ஆனால் அவர் இறந்து விட்டார் என்று கடைசியாக பார்க்கப் போன போது ஒரு சின்னக் குற்ற உணர்ச்சி இருந்தது. அந்த வயதில் அது என்ன விதமான உணர்ச்சி என்றே தெரியவில்லை. அப்பா அழைத்த போது வரமாட்டேன் என்று கூட மறுத்தேன், கட்டாயப் படுத்து அழைத்துப் போனார். அவர் ஆசைப்பட்ட ஏதோவொறு கொய்யாவை நான் திருடி தின்றுவிட்டேனா என்று கூட எண்ணினேன்.

அவர் இறந்த பிறகு அந்த மரம் மிக மிகச் சொற்பமாக விளைய ஆரம்பித்தது. அடுத்த மழைக்காலத்திற்காக காத்திருந்தேன். இந்த முறை குறைவான மழை தான் பொழிந்தது. அவரில்லாமல் கொய்யா அடிக்கும் சுவாரசியமும் குறைந்தது. அவ்வபோது கொய்யா அடித்து சாப்பிட்ட போது சுவை குறைந்தது போன்ற உணர்வு.

சில மாதங்கள் போன பின்பு அந்த கொய்யா மரம் மீண்டும் தன்னுடைய பழைய சீக்கு வந்த நிலையை அடந்தது. தாத்தாவின் மகனும் ஒரு தோட்டக்காரரை வைத்து உரமெல்லாம் போட்டுப் பார்த்தார். ஆனால் அந்த கோய்யா மரம் நல்ல நிலையை அடையவில்லை.

ஒரு நாள் பள்ளியை விட்டு வந்த போது அந்த மரம் இல்லை.

“தேவையில்லாமல்” இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதாக சொல்லி வெட்டி விட்டார்கள் என்று அப்பா மூலம் தெரிந்துக் கொண்டேன்.

மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டத் தருணம் அது.

ஒரு நாள் காலை எழுந்து வந்து தூக்கக் கலக்கத்தில் வெளியே வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, என் வீட்டிற்கு வெளியே முற்றத்தில் ஒரு சின்ன கொய்யா மரம் துளிர்த்து என்னைப் பார்த்து சிரித்தது.

கொய்யா மரம்

சிறுபதிவு

தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பல்வேறு விதமான காரணங்களால் முடங்கியிருக்கிறது. சாதாரணமாகவே நமது அரசியல்வாதிகள் அங்கே போய் தூங்குவார்கள் அல்லது போகவே மாட்டார்கள். இப்போது அங்கே விவாதத்துக்கே இடம் இல்லாத படி அமளிகளாலும்,  கூச்சல் குழப்பங்களாலும், ஆளும் கட்சியின் மெத்தன போக்காலும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

மகளிர் மசோதா, தெலுங்கானா விவகாரம், வகுப்புவாத மற்றும் வன்முறை தடுப்பு மசோதா- போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை இப்போது (மிக குறுகிய காலமேயுள்ள) நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதை பார்க்கும் போது அதன் அக்கறை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் உள்ளது என்பது தெளிவு. இது போன்ற மசோதாக்களை நிறைவேற்றி அதன் மூலம் ஒரு சில எம்.பி சீட்டுகளை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மூலம் அந்தந்த மசோதாகள் மீது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று அதனுடைய நன்மை- தீமைகள் ஆராயப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குத் தான் நாம் நம்முடைய வரிப் பணத்தையும், அதிகாரங்களையும் தந்து அனுப்பியிருக்கிறோம்.

அப்படி செய்ய ஆளும் கட்சி அதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். எதிர்கட்சிகளும் அதற்கு துணை புரிய வேண்டும். அது தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வரும்.

*****************************************************

இந்தியாவில் விற்கும் குறைந்த விலை கார்களின் பாதுகாப்பு தன்மைப் பற்றி ஒரு நிறுவனம் ஆராய்ந்து தன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

எந்தவொரு நிறுவனமும் இந்த சிறிய வகை கார்களில் சரியான பாதுகாப்பு முறைகளை அளிக்கவில்லை. ஒவ்வொரு கார்களிலும் காற்று பை (Air bag) எனப்படும் விபத்து பாதுகாப்புக் கருவி இருக்க வேண்டும். விபத்தின் போது அந்த காற்றுப் பை விரிந்து உயிர் சேதாரத்தை தவிர்க்க உதவும். அந்த பாதுகாப்புக் கருவியை எந்த நிறுவனமும் தருவதில்லை. இதே நிறுவனங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது இந்த பாதுகாப்புக் கருவி இல்லாமல் விற்பனை செய்வதில்லை.

மேலும் அவற்றின் பாகங்களும், வண்டியின் கட்டுமானத்திற்கு பயன்படும் உலோகம் லேசானதாக இருக்கிறது. இதனால் ஒரு விபத்தின் போது அவை அப்பளமாக நொறுங்கி பயனாளர்களுக்கு அதிகமான சேதாரம் தருகிறது.

இந்தியர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இதே வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் விதிகளை கடைப் பிடிக்கும் நிறுவனங்கள் இங்கே அவற்றை வசதியாக மறந்துவிடுகின்றன.

நமது மக்களுக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை அதிகம். ஆனால் அது தான் இப்போது உள்ள பல பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. எந்த ஒரு விதியையும் சரியாக பின்பற்றுவதில்லை. இது போக்குவரத்து சிக்னலில் இருந்து நாடாளுமன்ற விவகாரம் வரை பொருந்தும்.

இந்த “Careless” தன்மை நமது சாபக்கேடு. ஒருவர் அரசு அதிகாரிக்கு லஞ்சம் தறுவதை “பாவம் அவர் நமக்கு தானே உதவி பன்றார் அதுக்கு நாம நன்றி செலுத்துறோம்” என்று நியாயப் படுத்துகின்றார். அதிகாரியோ அவருடைய “நன்றி”யை அனைவரிடமும் எதிர்ப்பார்க்கின்றார். இதுவே மிகப்பெரிய ஊழலுக்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.

இதையெல்லாம் சாதகமாக வைத்துத் தான் எல்லா அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், சந்தர்ப்பவாதிகளும் பிழைக்கின்றனர். விதிகளை பின்பற்றுவதை மிகத் தீவிரமாக நாம் செய்ய வேண்டும் அப்படி இல்லையென்றால் அது நமக்கு தான் நஷ்டம்.

*****************************************************

ஜி.யு போப் என்பவர் இங்கிலாந்தில் இருந்து பாரத நாட்டிற்கு வந்து மதப் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். இங்கே வந்த அவர் தமிழைப் பற்றி தெரிந்துக் கொண்டு அதன் மீது பற்று கொண்டு தமிழ் படித்தார், தமிழறிஞரானார்,

திருவாசத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற சொல்லுக்கு ஏற்ப திருவாசகம் படித்து அதன் சிறப்பை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதைக் கண்டு சிலர், வந்த வேலையை விட்டுவிட்டு மாற்று  மத நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதனை விசாரிக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.யு போப் மொழிபெயர்த்த நூலை படித்தால் தான் இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்று அவரிடம் அந்த நூலை வாங்கிப் படித்தார்.

வழக்கு மறுபடியும் நீதிமன்றத்தில் வந்தது. அந்த நீதிபதி சொன்னாராம். “நான் இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். படித்தப் பின்பு தான் நான் உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன்” என்றார். ஜி.யு போப் அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு நீதிபதி தொடர்ந்தார்- “இந்த புத்தகத்தை படித்து முடித்த பின்னும் நீ அந்த மதத்திற்கு மாறாமல் உன் மதத்தைப் பிரசாரம் செய்துக் கொண்டிருக்கிறாயே? அது தவறு தான்” என்றாராம் அவர்.

– மெகா டி.வியில் தெளிதமிழர் பேரவை சார்பில் நடந்த பட்டிமன்றத்தில் கேட்டது.

*****************************************************

கூத்து – 10/2/2014

சிறுபதிவு

இன்றைக்கு தமிழக மக்களின் வாய்க்கு அவலாகக் கிடைத்தவர் மு.க.அழகிரி. அவர் தி.மு.க விலிருந்து (திராவிடர் முன்னேற்ற கழகமா அல்லது திரு மு. கருணாநிதி குடும்ப சொத்தா?)  நீக்கப்பட்டது முதல் அவரைப் பற்றியும், அவர் “தம்பி” சுடாலின் பற்றியும் கமென்ட்களும், நிலைத்தகவல்களும் (Status) குவிந்துக் கொண்டிருக்கின்றன.

இவரை தி.மு.க விலிருந்து நீக்கியதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது பயன் கிடைக்கும் என்று தலைவர் கணக்குப் போட்டிருப்பார் என்று தோன்றுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் நடைப்பெற்ற ஊழலாலும், மக்கள் விரோத போக்காலும், அமைச்சர்கள் முதல் அடிப்பொடிகள் வரை செய்த அட்டகாசங்களால் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவதர்குரிய வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறார் போலும்.

 மேலும் தன் குடும்பத்துக்காக தமிழ் மக்களை அடமானம் வைத்தவர் என்ற அவப்பெயர் அழகிரியை கட்சியை விட்டு நீக்கியதால் அகலும் என்பது போன்ற மாயையில் இருக்கிறார். இதற்காக அவருடைய “ஒன்றுவிட்ட” தம்பி வீரமணியை விட்டு ஒரு அறிக்கை வேறு. தேர்தல் முடியும் வரை இது போன்ற அரசியல் காமெடிகளும், கோமாளித்தனங்களும் தொடரும் என்று நம்புவோம்.

********************************************************

இந்திய அளவில் தற்போதைய காமெடி பீஸ் திரு.ரா கா, (அ கேவிடமிருந்து தட்டிப் பறித்திரிக்கிறார்) அவரை வைத்து அர்னாப் கோஸ்வாமி செய்த நேர்முக கேள்வி பதில் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி என்று காங்கிரஸார் அலறுகிறார்கள். எல்லா கேள்விகளுக்கும் நேரடியாக அல்லாமல் சுற்றி வளைத்து பதில் சொல்லி சமாளித்ததைப் பார்க்கும் போது, தம்பி தமிழினத் தலைவர் மு.க வுக்கே சவாலாக வரும் போலத் தெரிகிறது. வாழ்க பாரதம்!!!

********************************************************

தனியார் விமான நிறுவனங்கள் எம்.பி க்கள் தங்கள் விமானங்களில் பயனம் செய்யும் போது இலவச தீனிகள், தனியான லௌஞ்சுகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

அடப்பாவிகளா!! உங்களுக்கு சம்பளம் தருவதே ஒரு தண்டச் செலவு, இதுல ஓசில விமானப் பயனம் அதுல உங்களுக்கு ஓசில நொறுக்குத் தீனி, ‘தண்ணி’ எல்லாம் தரனுமா. இது மட்டும் ஒரு ஐ.டி கம்பெனியா இருந்தா cost cuttingனு சொல்லி எல்லா கனெக்ஷனையும் புடுங்கி இருப்பானுக. அடுத்த ஜென்மத்திலாவது எம்பி எம்பி குதித்தாவது எம்.பி. ஆயிடனும்.

********************************************************

“நான் தேடும் செவ்வந்தி பூவிது…” என்று இளையராஜா தன்னுடைய இசை மழையை பொழிந்துக் கொண்டிருந்தார்.

அந்த வெள்ளத்தில் கண்களை மூடி மூழ்கும் தருவாயில், இன்னொரு குரல் இ.ரா வுக்கு கோரஸாக,

  “தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை, அஅஆ..”

 என்று இழுத்து என்னை மூழ்க விடாமல் காப்பாற்றியது.

 புதிதாக இருந்தார் அந்த கோரஸ் நபர். Cabல் முதல் முறையாகப் பார்த்தேன் அவரை.

 நானும் நம்ம கம்பெனி கல்சுரல்ஸில் பாட்டு பாடப் போகிறேன் என்றார். நானும் சிரித்து, நன்றாக பாட்டு பாடுகிறீர்கள் என்றேன். பாட்டு பாட கற்றுக் கொண்டீற்களா என்று கேட்டு வைத்தேன்.

 அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க ஏம் ஜஸ் பாத்ரூம் சிங்கர் தான் என்றார். பின்னர் சிறிது நேரம் தன்னுடைய சாகித்யத்தை காட்ட மீண்டும் ஒரு பல்லவியை இ.ரா வுடன் பாடினார். பொறுத்துக்கொண்டேன்!!

 நீங்களும் வந்து பாட்டு கேளுங்களேன் என்றார், உடனே நான் “எங்க? பாத்ரூமுக்கா!!” என்றேன். கோரஸ் நபர் சிரித்துக் கொண்டே திரும்பிக் கொண்டார். அப்புறம் என்ன இ.ரா மட்டும் பாடிக் கொண்டிருந்தார்.

********************************************************

கூத்து – 29/1/2014

சிறுபதிவு

தூம் 3:

சமீபத்தில் பார்த்த படம். மூன்றே நாட்களில் 100 கோடி வசூல், அமீர் கான் வில்லத் தனமாக நடித்தது, அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது, தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த தரம் போன்ற பல காரணங்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். எதிர் பார்த்த படி நல்ல வசூலையும் தந்திருக்கிறது இந்த படம்.

தூம்3

தூம்3

ஆனால் படத்தில் பாதி நேரம் பைக் ஓட்டியே சாகடிக்கிறார்கள். பைக் சேசிங்குக்குத் தந்த முக்கியத்துவத்தை கொஞ்சம் அமீர்கான் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார் என்பதையும் காண்பித்திருக்கலாம். அந்த வங்கியில் செக்யூரிட்டி குறைவா, அல்லது இயக்குனரிடம் சரக்கு இல்லையோ?

அமிதாப் பச்சனும், தங்கர் பச்சனும் சொந்தமா? என்று கேட்கும் அளவிற்கு ஹிந்தி திரைப்பிரபலங்களைப் பற்றித் தெரிந்த ஒருவன் இந்த படத்தைப் பார்க்கும் போது ஹிந்தி படங்களில் வரும் எல்லா நடிகர்களும் ஒரு வீலில் பைக் ஓட்டுவார்களோ என்ற எண்ணம் மேலோங்கும்.

அபிஷேக் பச்சனுடன் வரும் அல்லக்கை காமெடி செய்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் மொக்கை மற்றும் பரவாயில்லை ரகம். கத்ரீனா கைஃப் வருகிறார், போகிறார் மற்றும் பாடல்களில் கொஞ்சூண்டு ஆடை கட்டி ஆடுகிறார் தமிழ் படங்களில் கூட இன்னும் கொஞ்சம் நடிக்க விடுவார்கள் போல!!

நோலனின் Prestige படத்தின் கருவை உருவி கொஞ்சமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இருந்து உருவியதைப் பற்றி தோலுரித்து தொங்கவிட வேறு பதிவர்கள் இருக்கின்றனர். நமக்கு தெரிந்த அளவில் இது மட்டும் கண்ணில் பட்டது.

சில ட்விஸ்டுகள் மற்றும் இறுதிக் காட்சியில் அமீர்கான்களின் முடிவு “நன்று”. சராசரி ரசிகனுக்கு சூப்பர், மற்றபடி சாதாரண ஒரு மசாலாத் திரைப்படம்.

ஜில்லா மற்றும் வீரம் :

ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கலுக்கு வந்து தமிழ் ரசிகர்களின் ரசிகத் ‘திறனுக்கு’ விருந்து படைத்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. இரண்டும் குடும்பப் பிண்ணனியில் அமைந்த வெட்டுக் குத்துத் திரைப்படங்கள். ஒருவர் தன்னை எடுத்து வளர்த்த தந்தையை காப்பாற்றி திருத்துகிறார், மற்றவர் தன்னுடைய காதலியின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.

ஜில்லா- வீரம்

ஜில்லா- வீரம்

என்னை பொறுத்தவரையில் இரண்டு படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம். ஒப்பீட்டளவில் வீரம் பரவாயில்லை என்றேத் தோன்றுகிறது. ஓரே ஒரு வசனம் மனதில் நிற்கும்படி இருந்தது வீரத்தில்.

“நம்மள சுத்தி இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா, மேல இருக்கிறவன் நம்மள நல்லா பார்த்துப்பான்!!”

மத்தபடி இரண்டும் கதாநாயகர்கள் தொட்டா தொட்டபெட்டா உடையும், சிரிச்சா எரிமலை வெடிக்கும் என்பன போன்ற  காதில் பூ வைக்கும் ஆஆஆக்- ஷன் காட்சிகளை வைத்து “மிரட்டியிருக்கிறார்கள்”. வேறு நல்லத் திரைப்படங்கள் இல்லாததாலும், இரண்டும் பரவாயில்லை ரகம் என்பதாலும் ஜில்லா கல்லா கட்டுது – வீரம் சோரம் போகாது.

நம்முடைய பெரிய ஹீரோக்கள் எப்போதுதான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்களோ.

– சரவணன்

சில திரை விமர்சனங்கள்

சிறுபதிவு

நேதாஜி:

நேதாஜி இந்த வார்த்தைக்கு அர்த்தம் “தலைவர்” என்பது ஆகும். சிலருக்கு மட்டுமே அவர்களுக்கு தரும் பட்டப்பெயர் பொருந்தும். (நம் ஊரிலும் சிலர் இருக்கிறார்கள் எளைய தளபதி, சுமால் தளபதி, பிர்ச்சி தளபதி என்று அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல்). ஆனால் சுபாஷ் சந்திர போஸுக்கு நேதாஜி என்ற பெயரே நிலைத்துவிட்டது. அவர் அதற்கு உதாரணமாகவும் திகழ்ந்தார்.

கொல்கத்தாவின் வீதிகளில் ஒரு சுதந்திரத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கூறிய சில வாசகங்கள் அங்கே இருந்த ஒரு சிறுவனின் மனதில் பதிந்தது. அவன் அதை மனதில் பாடம் செய்து கொண்டே தன்னுடைய நோட்டில் எழுதுவதற்கு அவனுடைய வீட்டிற்குள் ஓடினான்.

வீட்டிற்குள் அமர்ந்திருந்த தன்னுடைய தம்பியைத் தாண்டி ஓடினான். அதை கண்ட அவனுடைய தம்பிக்கு வெகுவாக கோபம் வந்தது. அவனை தாண்டி குதித்து சென்றதால் வந்த கோபம் அதையும் மீறி அப்படி என்ன அவசரமாக செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சென்று பார்த்தான்.

ஓடிவந்த அண்ணன் தன்னுடைய நோட்டில் கீழ்கண்ட வாசகங்களை எழுதினான் –

நான் பணக்காரனாவேன், நான் மாமனிதனாவேன், நான் புகழ்பெற்றவனாவேன் எனக்காக அல்ல, என் தாய்நாட்டிற்காக

“I will become rich , I will become great, I will become popular – not for myself,  but for my country.”

இந்த வாசகங்களை எழுதி விட்டு அண்ணன் வெளியே போய்விட்டான், ஆனால் அதைப் படித்த தம்பி தன்னுடைய இதயத்தில் எழுதிக் கொண்டான். அதையே தன்னுடைய வாழ்வின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டான். அந்த சிறுவன் தான் சுபாஷ் சந்திர போஸ். அந்த சுதந்திரத் தலைவர் யோகி ஸ்ரீ அரவிந்தர் ஆவார்.

1897 ஜனவரி 23 அன்று கட்டாக்கில் ஜானகி நாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். 16 வயதிலேயே துறவற நிலை அடைய வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் சரியான குரு கிடைக்காததால் இரண்டு மாதங்கள் கழித்து வீடு திரும்பினார். தன்னுடைய குருவாக சுவாமி விவேகானந்தரை இவர் ஏற்றார்.

தன்னுடைய தந்தையின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவருடைய சுதந்திர போராட்ட உணர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்த அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த கல்லூரியில் ஓட்டன் என்ற சரித்திரப் பேராசிரியர் இந்தியர்களை தரக்குறைவாக பேசியும், நடத்தியும் வந்தார். இதனால் கோபமுற்ற அவர் தன்னுடைய நண்பர்களை கூட்டிக் கொண்டு அவரை தாக்கினார். இதனால் கல்லூரியிலிருந்து சுபாஷும் அவர் நண்பர்களும் நீக்கப்பட்டார்கள் மேலும் இரண்டு வருடம் எந்தக் கல்லூரியிலும் சேர முடியாமல் படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளானார்கள்.

இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

1919ல் ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தது. ஜெனரல் டையர் என்ற கொலைகாரன் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொலை செய்தான். இது அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் சுதந்திரப் போரில் கலந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் என்றும் கூறலாம்.

நாட்டு சூழ்நிலைப்பற்றி அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்ட சுபாஷை அவரது தந்தையார் அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் (ஐ.சி.எஸ்) இந்தியன் சிவில் சர்வீஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் (IAS)க்கு ஈடானது) எழுத லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அதில் இந்தியாவிலேயே நான்காவதாக தேறினார் சுபாஷ், ஆனால் பாரதத்தை அடிமையாக்கி வைத்திருந்த ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது என்ற முடிவினால் அந்த பட்டத்தை அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வந்தார்.

இதை பாராட்டிய சித்தரஞ்சன் தாஸ் அவரை சுதந்திர போரில் பங்கு பெற அழைத்தார். இதே சமயத்தில் தான் காந்தியும் பாரத அரசியலில் ஈடுபட்டார். தாஸ் தான் நிறுவிய “தேசியக் கல்லூரியில்” 25தே வயதான போஸை தலைவராக நியமித்தார், அவர் மாணவர்களுக்கு ஆங்கிலேய அரசின் சூழ்ச்சிகளை விளக்கியும் சுதந்திர உணர்வு ததும்பவும் சொற்பொழிவாற்றியதுடன், பாடமும் நடத்தினார்.

1924 கொல்கத்தா மாகாணத் தேர்தலில் வெற்றிப் பெற்று சுபாஷ் கொல்கத்தாவில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் அவரைக் கைது செய்து அவரை சிறையில் அடைத்தது. அங்கு அவருக்கு காசநோய் தாக்கியது, இருப்பினும் அவரை சிகிச்சைக்காகக் கூட வெளியே அனுப்ப மறுத்தது ஆங்கிலேய அரசு. பல்வேறு போராட்டங்கள், மக்க்ளிடம் ஏற்ப்பட்ட கொந்தளிப்பு ஆகிய காரணங்களாலும், நோய் முற்றி அவர் பிழைப்பதே அரிது என்று நம்பியதாலும் ஆங்கிலேய அரசு அவரை நிபந்தையின்றி விடுதலை செய்தது.1930ல் ஐரோப்பியசுற்று பயணம் மேற்கொண்டார். பல தலைவர்களை சந்தித்தார்.

நேதாஜியும் ஹிட்லரும்

நேதாஜியும் ஹிட்லரும்

யாசகம் வேண்டிப் பெறுவது அல்ல, போராடிப் பெறுவதே சுதந்திரம் என்ற எண்ணம் கொண்டவர் சுபாஷ். “உங்கள் ரத்ததை தாருங்கள் உங்களுக்கு விடுதலையை பெற்றுத் தருகிறேன்என்று அறைகூவல் விடுத்தவர். இதனால் ஆரம்பத்திலேயே காந்திக்கும் போஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. பல இடங்களில் காந்தி எடுத்த தவறான முடிவுகளை சுபாஷ் எதிர்த்தார். சுயாட்சிக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்த போது பலரும் அதை எதிர்த்து பேச தயங்கிய போது போஸ் எழுந்து அதை தவறு என்று சுட்டினார். ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கை பாராட்டி கடிதம் எழுதினார் போஸ், உத்தமின் அந்த வழி தவறு என்று எதிர்த்தார் காந்தி. இதனால் போஸ் திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்.

ஜின்னாவுடன்

நேதாஜி – ஜின்னாவுடன்

1939ல் மீண்டும் போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்தலில் போட்டியிட்டார், அவரை எதிர்த்து ராஜேந்திர பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடக் கோரினார் காந்தி. அவர்கள் மறுத்துவிட பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். அதில் 1580 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றிப் பெற்றார். அதை எதிர்த்து உண்ணாவிரதம்!! இருந்தார்!! காந்தி. அவரை சமாதானப்படுத்த தானே பதவி விலகினார் போஸ்.

ஃபார்வர்டு ப்ளாக் என்ற கட்சியைத் தொடங்கினார் சுபாஷ். அதன் அகில இந்திய தலைவராக அவரும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1940 சமயத்தில் சுதந்திரப் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. பாரத நாட்டு மக்களிடம் சுதந்திரத் தாகம் வீறு கொண்டெழுந்திருந்தது. அதே சமயம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அப்போது ஆங்கிலேய அரசாங்கம் பாரத மக்களின் ஆதரவை வேண்டியது. ஆனால் போஸ் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினார். அதனால் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது. அங்கிருந்து தப்பி சென்ற அவர் இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஹிட்லரின் அழைப்பின் பேரில் ஜெர்மனி சென்றார், அங்கே அவருக்கு சிறப்பான வரவேற்புத் தரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதியளித்தார்.

பின்னர் பெர்லினில் ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் வானொலி ஒலிபரப்புத் துவங்கியது. 3000 வீரர்கள் அடங்கிய போர்ப்படை தயாரானது ஜெர்மனியில். ஆனால் 1942ல் ஜெர்மனி படைகள் ரஷ்யாவில் புகுந்தவுடன் வரலாறு மாறியது. ஜெர்மானிய படைகள் தோல்வி கண்டு பின்வாங்கின, அதைப் பார்த்த போஸ் பாரத விடுதலைக்கு அங்கே எந்த உதவியும் கிடைக்காது என்று அங்கிருந்து ஜப்பான் வந்தார்.

இந்திய தேசிய ராணுவம்

இந்திய தேசிய ராணுவம்

ராஷ் பிஹாரி போஸால் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி மீட்டு அதன் தலைவரானார். பர்மாவில் இருந்து இதனை இயக்கினார், நேதாஜி. ஆனால் ஆங்கிலேய படைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடியது நமது ராணுவம். இருப்பினும் மனம் தளராமல் பாரத எல்லை வரை முன்னேறியது. விதி வசமாக ஜப்பான் சரணடைந்ததால் இப்படை தோல்வியைத் தழுவியது. அப்போது காந்தி ஐ.என்.ஏ விற்கு ஆதரவு தந்திருந்தால் மிகச் சுலபமாக விடுதலை அடைந்திருக்கலாம்.

அவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று ஜப்பானில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும். அவர் சென்ற விமானம் விபத்து ஏற்ப்பட்டு அவர் இறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த நாளில் அப்படி ஒரு விபத்து பதிவு செய்ய படவில்லை என்று சமீபத்திய ஆய்வு தெரியப் படுத்துகிறது. இதனை இன்றைய பாரத அரசாங்கம் ஏற்கவில்லை. மேலும் அவர் உயிருடன் இருந்தார் என்று பலரும் நம்புகின்றனர். அவரைப் பற்றிய 33 கோப்புகள் அரசாங்க ரகசியமாக பிரதமர் அலுவலகத்தில் 75 ஆண்டுகளாக உள்ளது சந்தேகத்தை கூட்டுவதாக இருக்கிறது.

 அவர் இறந்தாரா இல்லையா, அப்படி இறக்கவில்லை என்றால் எங்கிருந்தார்? இந்த கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. அவருடைய மரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவர் இறந்தாரா என்பதை உறுதி செய்யாமல் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவரை காந்தி விரும்பாததும், காந்தியை தேச விடுதலை நாயகனாக ஆங்கிலேய அரசாங்கம் உருவகப்படுத்தியதையும் உற்று நோக்கும் போது இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பது கண்கூடு.

 பாரத விடுதலைக்குப் பின் பிரிட்டன் பிரதமர் கிளமென்ட் அட்லீ கொல்கத்தாவிற்கு வருகைத் தந்திருந்த போது அவரிடம் அப்போதைய கொல்கத்தா நகர தற்காலிக ஆளுநராக இருந்த தலைமை நீதிபதி திரு. சக்ரபோர்த்தி கேட்ட கேள்வியும் அவருடைய பதிலையும் மொழிபெயர்க்காமல் அப்படியே பதிவு செய்கிறேன்.

When B.P. Chakraborti was acting as Governor of West Bengal, Lord Attlee visited India and stayed as his guest at the Raj Bhavan for three days. Chakraborti asked Attlee about the real grounds for granting independence to India. Specifically, his question was, when the Quit India movement lay in shambles years before 1947, where was the need for the British to leave in such a hurry. Attlee’s response is most illuminating and important for history. Here is Governor Chakraborti’s account of what Attlee told him:

“In reply Attlee cited several reasons, the most important were the activities of Netaji Subhas Chandra Bose which weakened the very foundation of the attachment of the Indian land and naval forces to the British Government. Towards the end, I asked Lord Attlee about the extent to which the British decision to quit India was influenced by Gandhi’s activities. On hearing this question Attlee’s lips widened in a smile of disdain and he uttered, slowly, putting emphasis on each single letter— ‘mi-ni-mal’.”

 இன்று சுதந்திர வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 117வது பிறந்த தினம். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

 வந்தே மாதரம்!!

மேலதிக விவரங்களுக்கு:

http://psenthilraja.wordpress.com/the-freedom-movement-boses-contribution-ignored/

http://www.nehru.corrupt-india.com/jlnehru2.php

http://en.wikipedia.org/wiki/Subhas_Chandra_Bose

http://folks.co.in/blog/2012/01/23/who-brought-freedom-gandhi-or-netaji/

http://zeenews.india.com/exclusive/netaji-was-not-dead-but-in-russia-and-the-govt-knew-it_3601.html

History of the Freedom Movement in India (Firma KLM, Calcutta) R C Majumdar, Volume III pages 609 -10.

நேதாஜி – மறக்கடிக்கப்பட்ட சுதந்திர வீரர்

நிமிர்ந்து நில் – 3

பாரதிய கட்டடக்கலை :

பாரத கலாச்சாரத்தில் இன்றும் மாறாமல் இருப்பவை நம் பண்டைய கால கோவில்கள் மற்றும் கட்டடங்கள்.

உலகின் பல்வேறு பாகங்களில் சிறப்பு வாய்ந்த கட்டடங்கள் தோன்றியுள்ளன, தோன்றிய அதே வேகத்தில் என்ன காரணத்திற்காக அவை தோன்றின என்ற குறிப்புகளும் கூட இல்லாமல் அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன.

மாயன் பிரமிடுகள், இன்கா கட்டட அமைப்புகள், stone henge கட்டட அமைவு போன்றவை இதற்கான உதாரணங்களாக கூறலாம்.  அவை ஏன்-எதற்காக-யாரால் கட்டப்பட்டன போன்ற எந்த கேள்விகளுக்கும் தர்க்க ரீதியான பதில்கள் இல்லை. வெறும் யூகங்கள் மட்டுமே தலையை சுற்றி மிஞ்சி நிற்கும்.

இப்பதிவில் நம் பண்டைய கால கட்டட சிறப்புகளில் மிக மிக சிலவற்றை மட்டும் காணப்போகிறோம்.

நம் வசதிக்காக இரண்டு பிரிவாக பிரிக்கலாம். (இதற்கும் இன்றைய அறிவியல் ரீதியான பகுப்பிற்கும் சம்பந்தம் இல்லை)

 • கோவில்கள்
 • சமூக கட்டட அமைப்புகள்

1. கோவில்கள் :

நமக்குக் கோவில்கள் பற்றிய அறிமுகம் தேவை இல்லை, ஆனால் அவற்றின் கட்டடக் கலை நுணுக்கம் பற்றிய அறிவு தேவைப்படுகிறது.

எத்தனை வகை :

 • குப்தர் கால கோவில்கள்
 • வாதாபி சாளுக்கிய வடிவம்
 • பல்லவர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை
 • சோழர் கால கோவில் மற்றும் சிற்பக் கலை
 • கஜுராஹோ கோவில் வடிவம்
 • ஹோய்சளர் பாணி
 • விஜயநகர கோவில் பாணி
 • நாயக்கர் கால கோவில்கள்

இப்படி பல்வேறு கோவில் கட்டுமான வகைகள் அந்தந்த காலத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளன.

நமக்கு மிகவும் அறிமுகமான தஞ்சை பெரிய கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், தில்லை நடராஜர் கோவில், அவற்றின் சிறப்புகள் சில.

1. பெருவுடையார் கோவில் 1003 ல் ஆரம்பித்து 1010 ல் முடிவுற்றது : தோராயமாக 60 மீ உள்ள கோபுரம், 35 உட்கொவில்கள், இரண்டவது கோபுரம் என்று இத்தனை கட்டட வடிவங்களும் செய்து முடிக்க 7 ஆண்டுகள் மட்டுமே தேவைப்பட்டது. இன்று ஒரு பாலம் கட்ட நமக்கு இதைவிட அதிகமான காலம் தேவைப்படுவதை காணும்போது நம்முடைய தொழில்நுட்பம் மலைக்க வைக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்

2. எங்கேயிருந்தது கல்? : காவேரி பூமி ஒரு சம தள பூமி என்று தெரியும், அதை சுற்றி அருகில் மலை எதுவும் கிடையாது. பின் எங்கேயிருந்து கிடைத்தது இவ்வளவு பெரிய கோவில் கட்டுவதற்கு கல்? திருச்சிக்கு 60 கி.மீ தொலைவுலுள்ள நார்த்தாமலையிலிருந்து கொண்டு வந்தார்கள்.

பெருவுடையார் கோவில் முழுத் தோற்றம்

பெருவுடையார் கோவில் முழுத் தோற்றம்

3. ஒரே சிற்பம் இரண்டு பாவங்கள் : மோனலிசா ஓவியத்தை சிலாகித்து பல்வேறு ஓவியர்கள் கூறியிருகின்றனர், அதேவேளையில் இங்கே தில்லை நடராஜர்  கோவிலில் கஜசம்ஹார மூர்த்தி சிற்பம் உள்ளது. பார்க்க இங்கே சொடுக்குங்கள்.

4. நடராஜர் கோவில் : இது புவியின் காந்த மையக்கோட்டின் மையத்தில் அமைந்திருக்கிறது. எந்த விதமான புவியியல் அறிவுக் கூர்மை இருந்திருந்தால் இதை செய்திருக்க முடியும்?

நடராஜர் கோவில்

நடராஜர் கோவில்

5. பொற்கூரையின்  சிறப்பு : பொன்னம்பலத்தில் உள்ள கூரையில் 21,600 பொன் ஓடுகள் உள்ளன, அவை தினமும் விடும் மூச்சின் எண்ணிக்கையை குறிக்கின்றன. 72,000 தங்க ஆணிகளால் இணைக்கப்பட்டுள்ளது, நம் உடலின் மொத்த நாடிகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றது.
பொன்னம்பலம்

பொன்னம்பலம்

6. நேர்க்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள் : சிதம்பரம் நடராஜர் கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் மற்றும் காளஹஸ்தீஸ்வரர் கோவில் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கின்றன. இது தற்செயல் அல்ல. இம்மூன்று திருக்கோவில்களும் 79° 40′ கிழக்கு அட்ச ரேகையில் அமைந்திருக்கின்றன. இது நமது முன்னோர்கள் பொறியியல், வானியல் தொழில்நுட்பத்தில் சிறந்திருந்ததற்க்கான உதாரணம்.

நேர்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள்

நேர்கோட்டில் நிற்கும் ஸ்தலங்கள்

7. ஆயிரம் கால் மண்டபம் : ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு, அந்த எல்லா தூண்களும்  அனைத்தும் ஒரே நேர்கோட்டில் அச்சு பிசகாமல் நிற்கின்றன. இது சாதாரண விஷயம் அல்ல.

ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபம்

ஸ்ரீரங்கம் கோவில் ஆயிரங்கால் மண்டபம்

ராமேஸ்வரம் கோவில்

ராமேஸ்வரம் கோவில்

உலக அதிசயமாக சரியாக கட்டப்படாத ஒரு சாய்ந்த கட்டடத்தை போற்றும் இந்த உலகிற்கு இது சாதாரணமாகத் தான் தோன்றும் போல.

2. சமூகக் கட்டட அமைப்புகள்:

 1. மாமல்லபுரம் சிற்பங்கள்
 2. கொனார்க் சூரியக் கோவில்
 3. பௌத்த தலங்கள்
 4. மொகஞ்சதாரோ பெரு குளியல் தொட்டி
 5. அரண்மனைகள்
 6. குதூப் மினார்
 7. தாஜ் மஹால்

போன்றவைகளை இதில் வகைப்படுத்தலாம்.

மேலும் இது பொன்ற எண்ணற்ற பல கட்டடக் கலை பொக்கிஷங்கள் நம் நாட்டின் எல்லா மூலைகளிலும் உள்ளன. இவற்றின் சிறப்பை நாம் அறியாமல் இருக்கிறோம். சரி அறியாமல் விட்டதோடல்லாமல் அவற்றின் அழகை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

கோவில் மதில் சுவரில் போய் நமது பரீட்சை எண்ணை எழுதி வைப்பது, கோட்டைகளுக்கு சென்று வந்தால் அங்கே நமது பெயரை பதிவு செய்வது, மாநகர பேருந்துகளில் எழுதும் வழமை நமக்கு எல்லா இடத்திலும் எழுதும் சுதந்திரத்தை கொடுத்துவிடுகிறது.

போற்றி பாதுகாக்க வேண்டிய பல கலை வடிவங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறோம். மேல் நாட்டவர்கள் தங்கள் கலை வடிவங்கள் 100 வருட பழமையானது தான் என்றாலும் சிறப்பாக பாதுகாக்கின்றனர். ஆனால் நாமோ ஆயிரமாயிரம் ஆண்டு பழமையான கலை வடிவங்களை பாதுகாக்கவில்லையென்றாலும் குறைந்தபட்சம் சிதைக்காமல் இருப்பது நலம்.

பாரதீய கட்டடக் கலையில் இங்கு நான் கொடுத்திருப்பது ஒரு சிறு துளி தான். அதுவும் நாம் இங்கு பார்க்கும் தென் பாரதக் கட்டக்கலைகளை மட்டுமே. இவற்றை பாதுகாக்க வேண்டியது நமது கடமை மட்டுமல்ல பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

கொத்துமல்லி:

உலகின் மிகப்பெரிய ஹிந்து கோவில் இருப்பது கம்போடியாவில், சோழர்கால கட்டடக் கலை மற்றும் க்மேர் கட்டட கலையின் இணைவாக இந்த கோவில் இருக்கிறது. கடல் கடந்தும் வாழ்கிறது நமது கலை.

முந்தைய பதிவுகள்:

நிமிர்ந்து நில் – 1 

நிமிர்ந்து நில் – 2