சிறுபதிவு

புத்தாண்டு என்பதை இரண்டு விதமாக நாம் வரையறுக்கலாம்.

ஒன்று : ஒரு நாள்காட்டியின் படி ஒரு புதிய ஆண்டின் தொடக்கம்.

இரண்டு : ஒரு புதிய தொடக்கத்தின் அல்லது மலர்ச்சியின் காலகட்டத்தை கொண்டாடுவது.

இப்பொழுது நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது நான் முன்னதாக சொன்ன புத்தாண்டை. நாம் பயன்படுத்தும் நாள்காட்டியின் படி ஜனவரி 1ம் தேதி ஒரு ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக் கொண்டு அதை புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். இது சரியா என்பது தான் என்னுடைய கேள்வி.

குளிர் காலம்

குளிர் காலம்

ஒரு விவாதத்துக்காக இந்த காலகட்டத்தின் பருவ நிலையையே எடுத்துக் கொள்வோம், இப்போது குளிர் காலம். இந்த காலகட்டத்தில் எல்லாமே சற்று உற்சாகம் குறைந்து தான் காணப்படும். மரம், செடி, கொடிகளிலிருந்து அத்தனை உயிரினங்களுமே தங்கள் இருப்பிடத்தை விட்டு வராமல் அல்லது மிகக் குறைவாகவே வெளிவரும். ஏனெனில் இந்த பருவத்தில் இந்த உலகிற்கு ஆதார சக்தியாக உள்ள சூரிய ஒளி மிகவும் குறைவான நேரமே கிடைக்கும்.

வசந்த காலம்

வசந்த காலம்

பகல் குறைந்து இரவு அதிகமாக இருக்கும். மரம், செடி போன்ற தாவரங்கள் இலைகளை உதிர்த்து மொட்டையாக நிற்கும். புல் போன்ற வகைகள் மொத்தமாக கருகி மண்ணிற்கு அடியில் விதைகளை விட்டு விட்டு போய்விடும். இப்படி குளிர்காலம் என்பது ஒரு மந்தமான, வளர்ச்சி இல்லாத நிலையை சுட்டுவதாகவே இருக்கின்றது. திரைபடங்களில் சோகமான அல்லது அமானுஷ்யமான நிலையை எடுத்துக் காட்ட பனி நிறைந்த, இருள் அடர்ந்த ஒரு சித்திரத்தையே காட்டுவார்கள்.

மாறாக. வளர்ச்சிக்கும், மலர்ச்சிக்கும் எடுத்துக் காட்டாக சூரிய ஒளியின் வரவும், அதை பார்த்து பறக்கும் பறவைகள், இலை துளிர்த்து பசுமையை பறைசாற்றும் மரங்கள், வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர் செடிகள். அதை சுற்றி வரும் பட்டாம்பூச்சிகள். அவற்றின் குறுங்கால்களால் மெல்லிய தென்றலில் பரவும் மலர்களின் மகரந்த வாசம். பூலோக சொர்க்கமாக மாற்றும் வசந்த காலத்தின் சித்திரம்.

இப்படி பருவ நிலையே நேர்மறையான (பாஸிடிவ்) எண்ணங்களைத் தரும். இதை விடுத்து மந்தமான கதியில் இருக்கும் காலக் கட்டத்தை, வெறும் ஒரு நாள் காட்டியின் படி ஆண்டின் தொடக்கமாக கொள்வது என்ன விதமான அறிவியல் என எனக்கு புரியவில்லை.

நான் ஏதோ தமிழ் புத்தாண்டை முன்வைத்து இதை சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம். மிகப் பழங்காலத்திலிருந்தே உலகில் எல்லா நாடுகளைச் சேர்ந்தோரும் தத்தம் பகுதியில் வசந்த காலத்தையோ அல்லது முதுவெணிற்காலத்தின் முற்பகுதியையோ தான் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடி இருக்கின்றனர்.

முட்டாள்கள் தினம் வந்த கதையைப் பார்த்தால் இதை நாம் புரிந்து கொள்ள இயலும். நாம் இன்று பின்பற்றும் ஆங்கில நாள்காட்டி முறையை பிரான்சில் அமல்படுத்தியபோது ஜனவரி ஒன்றாம் தேதியை ஆண்டின் தொடக்கமாக அறிவித்தார்கள். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் சிலர், பழைய முறைப்படி ஏப்ரல் மாத்திலேயே கொண்டாடினர். அவர்களை தூற்றவும், அவ்வாறு செய்வதை கேலி செய்யும் நோக்கத்திலும் ஆரம்பித்தது தான் முட்டாள்கள் தினம். ஆனால், எனக்கென்னவோ உலகமே முட்டாளாக்கப் பட்டதைத் தான் சூசகமாக முட்டாள்கள் தினம் என்று கொண்டாடுகிறோமோ என்று தோன்றுகிறது.

அடுத்து, இதை எப்படிக் கொண்டாடுகிறார்கள்?

1. இரவு 12 மணிக்கு கொண்டாட்டங்களை ஆரம்பித்து உறங்காமல் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இரவு முழுக்க உறங்காததால் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லிக் கொள்வதை உறங்கியே கழிக்கிறார்கள்.

2. மேற்கத்திய கலாச்சார மோகம் கொண்டு மது அருந்துகிறார்கள். இதில் பெண்களும் அடங்குவார்கள் என்பது வேதனைக்குறிய உண்மை.

வளர்ச்சியின் தொடக்கமாக இருக்க வேண்டிய புத்தாண்டை போதையின் பாதையில் ஆரம்பிக்கின்றனர். இது சரியா?

நமது பண்பாட்டின்படி ஆண்டு தொடக்கத்தை (சித்திரை 1 அல்லது யுகாதி) எப்படிக் கொண்டாடுகிறோம்?

1. அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து இறைவனை வணங்குகிறோம் அல்லது கோவிலுக்கு செல்கிறோம்.

2. அந்த ஆண்டை சரியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பெரியோர்கள் ஆசி கோருவோம்.

3. கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு வகை பிரசாத்தை உண்போம் – வாழ்வில் இன்பம் துன்பம் இரண்டும் வரலாம் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும் என்பதற்காக தான் ஆண்டின் தொடக்க தினமான அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுகிறோம்.

இப்படி அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உள்ள நமது புத்தாண்டை விடுத்து வெறும் நாட்காட்டியின் அடிப்படையில் உள்ள ஒரு தினத்தை புத்தாண்டாக கொண்டாடுவது அறிவீனம் ஆகும்.

எது புத்தாண்டு

Advertisements

ரௌத்திரம் பழகு

ஏக்ஸ் விளைவு (Axe effect):

பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி ஊடகங்களில் தற்போது அதிகமான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஊடகங்கள் தங்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்கின்றனவா? என்பது தான் என் கேள்வி.

ஒரு விளம்பரம் சில நாட்களாக என் மனதை கரையானாக அரித்துக்  கொண்டிருக்கிறது. ஆம் அந்த விளம்பரம் தான் இந்த பதிவின் தலைப்பாக உள்ளது. அதுவும் நாம் அடிக்கடி பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே காட்டப்படுகிறது. அந்த விளம்பரத்தின் நோக்கம் அந்த குறிப்பிட்ட வாசனை திரவியத்தை  சந்தைப்படுத்துவது (மார்க்கெட்டிங்). ஆனால் அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் தான் என்னுடைய கோபம் இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சி, ஒரு காதலன் தன் காதலிக்காக ஒரு உணவகத்தில் காத்திருப்பார், அந்த பெண் தூரத்தில் வரும் போதே இவரை பார்க்க வந்து கொண்டிருப்பார், நடுவே மற்றொரு ஆண் அவரை கடந்து போவார் உடனே அந்த பெண் தான் காண வந்த நண்பரை விடுத்து அவரைப்  பார்த்து மயங்கிவிடுவார், ஏன் என்றால் அவர் இந்த வாசனை திரவியத்தை பயன்படுத்தி இருப்பார்.

இந்த விளம்பரம் இங்கே சொல்லக்காரணம், இந்த விளம்பரம் மட்டுமே இங்கே எழுதமுடிவதாய் உள்ளது, மற்ற விளம்பரங்கள் காண சகிக்காதவை. இது போல அல்லது இதை விட கேவலமாக பல விளம்பரங்கள் ஆண்கள் வாசனை திரவியங்கள், சோப்பு, பவுடர் போன்றவற்றுக்கு உள்ளன.

இதில் உள்ள மையக் கருத்து என்ன? பெண்களைக் கவர வெறும் இந்த வாசனை திரவியம் போதும், பெண்களும் வெறும் இந்த கவர்ச்சியால் மயங்கிவிடுவதாகவும் காட்டப்படுகிறது. பெண்களை இதைவிட கேவலமாக சித்தரிக்க முடியாது.

இதே ரீதியில் பெண்களை கேவலப்படுத்தும் திரைப்படங்கள் – எதற்கெடுத்தாலும் “மச்சான்!! இந்த பொண்ணுங்களே இப்படி தாண்டா ” என்று வசனம் பேசும் நண்பன் கதாப்பாத்திரம். “அடிடா அவள.. வெட்ரா அவள…” மட்டம் தட்டுவது போன்ற பாடல்கள். ஏதோ இந்த உலகில் பெண்களை தவிர மோசமான ஜீவராசியே இல்லை என்கிற ரீதியில் project செய்கின்றன. எல்லா ஊடகங்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெண்களை ஒரு போக பொருளாக மட்டுமே காட்டுகின்றன.

பெண்களை போற்ற வேண்டும், பெண் சுதந்திரம் வேண்டும் என்று வாய் கிழிய பேசும் அதே வேளையில், இந்த வகையான பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு ஊடகங்கள் தங்களின் தார்மீக எதிர்ப்பைக் கூட காட்டுவதில்லை. பெண்கள் அமைப்புகளும் இது போன்ற ஊடகம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனவா என்று தெரியவில்லை.

ஒழுக்கம், அன்பு, பாசம், பெண்களை மதிக்கும் தன்மை போன்றவை சிறுவயதிலிருந்தே சிறுவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். அப்படிக் கற்றுத்தராதபட்சத்தில் இந்த மாதிரியான விளம்பரங்கள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றை கேட்டும் கண்டும் வளரும் குழந்தைகள் எப்படி பெண்களை மதிக்கவோ, ஒரு சக மனுஷியாக பார்க்கவோ செய்யும்?

நம்முடைய எதிர்ப்பைக் காட்ட இது போன்ற மலினமான விளம்பரங்கள் மூலமாக தங்கள் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்காமல் இருப்பதுதான் நம்மால் எளிமையாக செய்ய முடிவது. இதுவும் ஒரு சத்தியாகிரகம் தான்.

சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.

— மகாகவி பாரதியார் 

 

சாட்டையடி :

இது போன்ற என் சமூக கோபங்கள் ரௌத்திரம் பழகு என்ற தலைப்பின் கீழ் பதிவிட போகின்றேன் .